வண்ணமிகு நிறங்கள்
கண்ணாடி கூண்டிற்குள்
தேர்ந்த கற்கள்
ஒளி மிகா வெளிச்சங்கள்...
வேளைக்கு உணவு...
இன்ன பிற வசதிகளுடன்
நீரில் கரையும் பிராண வாயு
பாதி வளைந்த பானையில்
வரைய இயலா
வண்ணக்கோடுகளாய்
வளைய வரும் வண்ணமீன்கள்
மேல்கீழாய், வலமிடமாய்
நீந்தி செல்கின்றன....
அவை
தன் மீது படிந்த
வண்ணங்களை - அதன்
நிழல் படிமங்களாகவே
எண்ணி நீந்துகின்றன...
கண்களில் எழும்
கேள்விக்குறிகளைத்
தவிர்க்க இயலாமல்
குனிந்த தலையுடன்
பார்க்கிறான்
அதனை ரசிப்பவன்...
இணை இழந்த
மீனின் அழுகையொலியால் எழும்
பக்ககச்சுவர்களின்
அதிர்வுகளையும் கேட்கிறான்...
மீனின் குறிக்கோளற்ற
நெடும்பயணச்சுற்றுப்பாதையும்
கூர்நோக்குகிறான்,
தெளிவாகவே....
ஆனால்,
இன்னும் அவனறிய
இயலவில்லை நீந்துதல்
அவற்றின் தொழில் அல்ல
இடையறா வாழ்க்கை போராட்டம் என்று!
No comments:
Post a Comment