Friday, August 13, 2010

அடைக்கலம்

மழைக்கு கூட
ஒதுங்காதவர்கள்
மழை வெள்ளத்திற்கு
அடைக்கலமாய்
பள்ளிக்கூடத்தில்!

சுதந்திரம்?

இன்று தான்
காசு கொடுத்து வாங்கினேன்
கூண்டு பறவையொன்றின்
சுதந்திரத்தை!
நாளை சுதந்திரதினமாம்!

Thursday, August 12, 2010

பருவம்

இலையை சருகாக்கி
சருகை இலையாக்கி
தன்னுடன் கொண்டு செல்ல
காத்திருக்கிறது காற்று!

ஆனால்...

பறவைக்கு ஈடின்றி
சருகாகவே உதிர்ந்து விடுகிறது
பனிக்காலத்தில்
உதிரும் இலையொன்று!

பட்டாம்பூச்சியின் பாதச்சுவடு

நூற்றுக்கணக்கான
மலர்களுக்கிடையே
ஈரிதழ் மட்டும்
சிறகு முளைத்து
பறந்து விட்டன
காற்றின் நேர்கோட்டு திசையில்
வண்ணங்கள் யாவும்
உதிர்த்து சென்ற
இதழ்களை
உற்று நோக்கும் போதுதான்
தெரிந்தது...
பட்டாம்பூச்சி
பறந்து சென்ற
பாதையின் சுவடு

சில நியதிகள்...

இயற்கை சிந்திய
வண்ணங்களை யொடுக்கி
வானவில்லொன்று செய்தேன்
கோடை நாளொன்றின்
இறுதிப்பொழுதில்
பூமிக்கொன்றும்...
ஆகாயத்திற்கொன்றுமாய்
விட்டம் வளைந்த
வானவில்
சில நியதிகளுக்குட்பட்டு
இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது
மழை நாளொன்றுக்காக...

சில்லறை சப்தம்

வயிற்றுப்பசிக்காக
பார்வையற்ற ஒருவனஅ
பாடும் பாடலொன்றின்
சுருதி, லயம் இரண்டையுமே
அவ்வப்போது
சரி செய்து கொண்டிருக்கிறது
இடை இடையே
தட்டில் விழும்
சில்லறை சப்தங்கள்!

குமுதத்தில் பிரசுரமான எனது கவிதை

நிழல்... நீ... மரம்..

இலைகளை மட்டுமே
உதிர்த்து பழகிய மரம்
பூக்களையும் கூட
உதிர்க்க முயற்சிக்கலாம்
நிழலுக்காக நீ
ஒதுங்கும் போது!

அரூபமாய்... சில மரங்கள்

புகலிடம்
தேடியழைந்த சிட்டுக்குருவிக்கு
என் வீட்டு பரணில்
அமைந்ததோர் வாழிடம்
இரண்டு வெண்கல பாத்திரங்கள்,
பழைய புத்தக மூட்டைகள்
மரச்சாமான்கள்
என அனைத்தையும் தாண்டி
வேரிடுகிறது
இலை, கிளை ஏதுமின்றி
அரூபமாய் ஒரு மரம்!

ஆனந்த விகடனில் பிரசுரமான எனது கவிதை

சில்லறை பிரச்சனஐ

பிச்சைக்காக கையேந்தியவனிடம்
"சில்லறை இல்லை"
என்றபோது தான்
நினைவுக்கு வந்தது
நடத்துனரிடம்
இழந்துவிட்ட
மீதிச்சில்லறையின்
ஞாபகம்!

ஒற்றைச்சிறகு

கடவுச்சீட்டில்லை...
மொழியறிவுமில்லை...
பிறகெப்படி
கண்டம் கடக்கின்றன
இந்தப்பறவைகள்...
மனதெழுப்பிய கேள்விகளுக்கு
விடையாய்
தன் ஒற்றைச்சிறகை
உதிர்த்து சென்றது
புலம் பெயரும் பறவையொன்று!
பதிலை பத்திரமாய்
பாதுகாத்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

மனப்பறவை

கீழ்திசை நகரும்
மேகமொன்று...
கீழ்திசை பறக்கும்
பறவையொன்று...
அவற்றின் வேகம்
ஈடுதந்து நகரும்
நதியொன்று...

மூன்றுமே அறிவதில்லை
நான்காவதாய்
மூன்றின் பின் தொடரும்
என் மனப்பறவையை!

நாட்குறிப்பு

மலர் செடியொன்று
நீ உதிர்த்த
புன்னகைக்கு ஈடாய்
தன் மலரை உதிர்த்து
கடன் தீர்த்து கொண்டது!

மலரை நீ சூடிக்கொண்ட போது
உன் புன்னகையை மலர்
சூடிக்கொண்டது!

எது பேரழகென
விவரிக்கமுடியாமல்
வெட்கிக்கொண்டது
காற்று!

அன்றைய தினம்
அழகான தினமென்று
தன் நாட்குறிப்பில்
குறித்துக்கொண்டது
நிகழ்காலம்!