Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, November 7, 2010

பாதச்சுவடுகளும்... அர்ச்சனை பூக்களும்...


நந்தவனத்தின்
தரை முழுமையும்
அழகழகாய்
பரவிக்கிடந்தன....
போகன்வில்லா பூக்களும்
மஞ்சள் நிற அரளியும்
வெள்ளை செம்பருத்தியும்....


பூக்களுக்கு இடையூன்றி
தன் பாதம் படாதவாறு
பூனை நடைபயின்று
இரு செம்பருத்திகளை
சாமிப்படத்திற்கென
பறித்து சென்றாள்
வீட்டுக்கார சிறுமி!

உதிர்ந்த மலரிதழ்களுக்கு ஊடாய்
பதிந்து கிடந்த - அவள்தம்
குட்டி பாதச்சுவடுகளை
தம் பூக்களால்
அர்ச்சித்துக் கொண்டிருந்தன
நந்தவனச்செடிகள் - அன்றைய
நாள் முழுவதும்!

செக்கு மாடு


தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளிக்காவிடில்
அடு்த்த பிறவியில்
கடவுள்,
"செக்குமாடாய் பிறக்க வைப்பார்"
என்பாள் அம்மா அடிக்கடி....

கிராமத்தில்
செக்குமாட்டை
பார்க்கும் போதெல்லாம்
மிகவும் வருந்துகிறேன்....

சென்ற பிறவியில்
தீபாவளிக்கு
எண்ணெய் தேய்த்து
குளித்திருக்காதோ?
அந்த செக்கு மாடு!

கவி மாயாவி.

படம் நன்றி
http://marakkanambala.blogspot.com/2007/01/blog-post.html

Wednesday, September 22, 2010

துயர் பாஷை



மிக அழகான கூண்டில்
உணவு... தண்ணீருடன்..
அடைக்கப்பட்டிருந்தது
அந்தக்கிளி
அலகில் சிவப்பும்
உடலில் பச்சையும் பூசிக்கொண்டு
போவோர் வருவோர்
எல்லோரையும்
தன் கீச்சுக்குரலில்
இடைவிடாது விளிக்கிறது....

ஒருவேளை
கிளியின் பாஷையில்
அதன் துயர்பகிர
தேர்ந்த சொற்கள்
இல்லாதிருக்கவும் கூடும்.

கவிமாயாவி